புதன், 25 மார்ச், 2009

நாங்கள் இனமானத் தலைவர்கள்

நாங்கள் இனமானத் தலைவர்கள்
மொழிப்போர் தியாகிகள் நாங்கள்
இனமான உணர்வு கொண்டவர்கள்

மொழியுணர்வை ஊட்டி
வாழ்ந்து கொண்டிப்பவர்கள்

பொதுவுடைமை நெறி போற்றி
பொதுவுடைமையில் வாழ்கிறோம்

அடைந்தால் திராவிட நாடு
இல்லையேல் சுடு காடு
எங்கள் கொள்கையாக இருந்தது

ஈழ மக்கள்
எங்கள் தொப்புள் கொடி உறவு

தனி ஈழமே
எங்கள் கொள்கை

ஈழத்தில் எத்தனை உயிர் போனாலும்
கண்ணீர் வடிக்கிறோம், கதறுகிறோம்
கவிதைகளும் எழுதுகிறோம்

மேடைதோறும்
வாய் கிழிய, வயிறெரிய,
நெஞ்சு வலிக்கப் பேசுகிறோம்

அனைத்துலகுக்குத் தெரியாமல்
அணைத்து வைக்கிறோம்

வெளி உலகுக்குத் தெரியாமல்
வீரியப்படுகிறோம்

வேற்று மொழிக்காரர்களிடம்
வெளிப்படுத்தக் கூசுகிறோம்

எங்கள் இருப்பைக் காட்டி
இருப்பு வைத்துக் கொள்கிறோம்

இன்னுயிர் நீத்த இனமான உறவுகளை
ஓடோடிப்போய் பார்த்துக் கதறுகிறோம்

பேருந்து உடைப்பதில் இருந்து
பாடை வரை செய்கிறோம்

ஈழத்தில் பட்டினிச் சாவு
நாங்கள் பசியாறிக் கொள்கிறோம்

கூட்டணி தர்மம் செய்கிறோம்

தேர்தல் வந்துவிட்டது
எங்கள் கொள்கைகளை கொஞ்சம்
மூட்டை கட்டி வைக்கிறோம்
பா(வாஆ)டைக்குள்
நாங்கள் நுழைந்து விடவில்லை

நுழைந்தது எங்கள்
திராவிடமும், இனமான உணர்வும் மட்டுமே...!

ஞாயிறு, 8 மார்ச், 2009

பிணங்களைக் காக்கவோ வருவர் ?

நினைவுகளோடு வாழும்
நிலமற்ற அகதிகள் நாங்கள்.
'நாளைய பொழுது நமக்கானது'
கனவுகள் பொய்த்துக்
காலிடை மிதியும்
பிணங்களை விலக்கி
உடலில் வழியும்
குருதியைத் துடைத்து
ஓடுதல் ஒதுங்குதல்
உயிர் வாழுதல் பற்றிய
ஏக்கமும் துயரும்....

கடற்கோள் கொள்ளையிட்ட
துயரைவிடக் கொடுமையிது
காப்பிடமற்ற விரிந்த வெளியில்
கூப்பிடவும் யாரும்
கேட்காத் தொலைவிருந்து
காத்திடுவர் தூதர்
கடலிடை வந்து மீட்டிடுவர்
என்றான நம்பிக்கையும்
களவு போய்
பிணங்களின் நடுவேயான கூக்குரலும்
குழந்தைகளின் கதறலும்
ஏழ்கடல் நுனிவரையும்
எங்களின் அழுகை....

எறிகணை துரத்தித் துரத்தி
எறிந்திருப்பது கடைசி முனை....
எங்களைப் பற்றி உலகம் பேசுகிறதாம்
எஞ்சிய மிச்சமும்
எறிகணை கொல்ல மிஞ்சிய
பிணங்களைக் காக்கவோ வருவர் ?
கடவுளர் எங்கே எங்களைக் காத்திடக்
கடல்தாண்டி நிற்கிறோமென்றவர்
நிலமைதான் என்ன ?

இனியொரு பொழுதிலும்
துளிர்விடா வண்ணமாய் - எம்
பொன்செளித்த நிலமெங்கும்
புதையுறும் கொல்லிகள்
நூறாண்டு போனாலும் ஆறாமல்
அடிவேரோடு தமிழ்ச்சாதியை
அகற்றிடும் மூச்சுடன்
ஆழப்புதைகின்றன உயிர்க்கொல்லிகள்.

பனி பூத்த வெளிகளில்
பாலைவனப் படர்வுகள்
பூப்பூத்த மரங்களின்
வேரின் தடயங்கள் அழிகின்றன.
இனியெந்த அகழ்வும்
இல்லையெனும்படியாய் யாவும்
இல்லாதொ(த)ழிக்கப்படுகின்றன.

இயற்கையின் பொழிவுகள்
கந்தகக்காற்றில் செத்து மடிகின்றன.
கிரோசிமாவின் மிச்சமாய் நாளை
பச்சையம் செத்து எம் பரம்பரை
வீரியமற்று சாகட்டுமென்றா
ஆரியர் துணையாய் இவ்வுலகு
ஆயுதம் களை
அகிம்சையைத் தரியென்கிறது...?

நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!!

உலகத் தமிழினத் தலைவன்......நீ
எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ
எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ
உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா
தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று


சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று
தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று
தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று
உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று
தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று
நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று
கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று.

உலகத் தமிழினத் துரோகி ....நீ
தமிழர்கள் உயிரை எடுப்பவன்....நீ
பதவி வெறி பிடித்தவன்... நீ
யாரை ஏமாற்ற ஊர்வலம் நடத்துகிறாய்...நாடகம்.
பதவியில் இருந்துகொண்டு ......நீ
ஈழத்தில் செத்து மடிகிறது தமிழினம்....நீயோ
உன் ஆட்சி போய்விடும் என்று தவிக்கிறாய் ....ஏனோ?
நம்ப வைச்சு கழுத்தறுக்கும் குள்ள நரி .... நீ!!

உனக்கு தெரிந்த மொழியில் என்னால் முடிந்தது....
புரிந்துவிடும் என்ற நம்பிக்கையோடு.........?

இனப்படு கொலையை தடுத்து நிறுதிடக் கூடிய இடத்திலிருப்பதால்
உன்னிடம் அழுது கேட்கிறது உலகத்தமிழினம்....!!
நினைத்தால் உன்னால் முடியும்..... ஆனால்
நினைக்க விடவில்லை உன் பதவி மோகம்
உலகத்தில் நடந்திராத பேரவலம் நடக்கிறது ஈழத்தில்
உனக்கோ சோனியாவின் அரவணைப்பு பாரதத்தில்....!!
இனியும் உன்னை நம்பிட ஏமாளிகளில்லை பாரினில்
எமைக்காத்திட தலைவன் இருக்கிறான் ..ஈழத்தில்.

அவரோடு தோள் கொடுத்திட தமிழின உணர்வாளர்களும்
உலகத் தமிழினமும் இருக்கிறது.....உலகத்தில்
நிச்சயம் வென்றிடுவொம் இந்தியாவின் சதியிலிருந்தும்
உலக வல்லரசுகளின் பிடியிலிருந்தும்.....
நம்பிக்கையோடு.......
உலகத்தமிழினமே திரண்டு எழுந்துவிடு ...உலகதில்
எமக்காய் நாம்தான் போராட வேண்டும்
இன்னும் போதாது உன் எழுர்ச்சி எழுந்துநில்
நிமிர்ந்து நில் இதுதான் உன் கடைசி மூச்சு

வியாழன், 5 மார்ச், 2009

முகமிழந்த வாழ்க்கை

காலம்
தூக்கி எறிந்தது
தொலை தூரத்திற்கு
வந்தவன் வந்தவன்தான்
போக வழி தெரியவில்லை

தொலைவு, மரணம்,துயரம்
இவற்றோடு நெருங்கி விட்டேன்..

சிக்குண்ட மயிர்
உயிரற்ற விழிகள்
வாடிய முகமாய்
அலைதலும் தொலைதலுமாய்
கூவிக்கொண்டே ஓடுகிறது வாழ்க்கை...

மொழி தெரிந்த
ஒரு பட்டிணத்துக்குள்
முகமூடி வாழ்க்கை...

வாழ்விழந்த நாள்
விலகும் என
சகித்து கொண்டே
வாழ்கிறது வாழ்க்கை....
கசியும் நீரை
காரணம் சொல்லி நிறுத்த முடியவில்லை...

இழப்புக்களின் துயரம் தாங்காமல்
இதயம் வெடிக்கிறது,
இழப்பிலும் பூத்து
இறுதி ஊர்வலத்தில் வளர்கிறேன்..
இன்னொரு தேசத்தில்...

"மறைவில்
நொருங்குவதற்கு பதிலாய்
கடலில் கரைந்திருக்கலாம்
அலையாக எழுந்துவர......"

காலங்களும் கனவுகளும்

இடமும் இருப்பும்
நிலையனதாக இல்லை
வாழ்க்கை
அர்த்தமற்றதாகிவிட்டது.....

சொந்தம் பந்தம்,ஊர்,உறவு
நாடு,நகரம்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
முகமிழந்து முகவரியிழந்து
சொந்த பெயரற்று
பெயர் சொல்ல முடியாத
நாடுகளில் தற்கலிகமாய்....

காலங்களும் கனவுகளும்
புதைந்துபோய்
காயங்களும் கண்ணீரும் மட்டுமே
மிச்சப்பட்டிருக்கிறது.......

இழப்புக்களும் ரணங்களும்
என்பின் தொடர்ந்த வண்ணம்
இருக்கின்றன.........

வாழ்வின் நீள்பாதையில்
நிழல் எது-நிஐம் எது
நிரந்தரம் எது-என்று
உணர்த்தி போனதாய்
மண்ணும் மணமும்
சாலைகளில்.........

விரக்தியை மென்று
பொறுமையில் உழன்று
வரலற்றில் நேர்ந்த
வஞ்சனையை எண்ணி
நொந்து நூலகிறது
என் வாழ்க்கை.......!

தமிழன் என்ற இனம்

என் இனத்தை
அலட்சியமாய்
என் நிறத்தை
அருவருப்பாய்
பார்க்கும் இந்நாட்டு
மக்கள்

பொன்னகை
மேனியில்
மின்னியபோதும்
கையில்
சுமையோடும்
நெஞ்சில்
வலியோடும்
புன்னகை தேடியலையும்
என் இனத்தமிழர்கள்

ஓய்வின்றி உறக்கமின்றி
இயந்திரமாய்
உழைத்த ஊதியத்தை
உறிஞ்சி எடுக்கும்
வரிகளின் வலிகள்

தமிழன் என்ற
இனம் உலகில்
இருப்பதை
எப்போதாவது
தீவிரவாதிகளாய்
ஞாபகப்படுத்திக்
கொள்ளும் ஊடகங்கள்

தமிழின உணர்வுகளை
வெளிப்படுத்திக்
கொண்டால்
சிறைப்பிடித்து
சித்திரவதை செய்யும்
சட்டதிட்டங்கள்

இப்படியாக என்
சந்தோஷவேர்கள்
அறுந்தபடி
வாழ்ந்திடும் நான்
இந்நாட்டில் அகதி!

குரல் கொடு தோழா

குளிரிலும் பனியிலும்
உறைந்துவிடும் நீர்போல்
உள்ளதின் உணர்வுகளும்
உறைந்து கிடக்கின்றது

உருக வைக்க இங்கு
உன் குரல் கொடு
தோழா..!

உருவிலும் உயிரிலும்
உறவுகள் அங்கு
மெலிந்து கிடக்கின்றது

உயிர்வாழ கொஞ்சம்
உணவு கொடு
தமிழா..!