புதன், 25 மார்ச், 2009

நாங்கள் இனமானத் தலைவர்கள்

நாங்கள் இனமானத் தலைவர்கள்
மொழிப்போர் தியாகிகள் நாங்கள்
இனமான உணர்வு கொண்டவர்கள்

மொழியுணர்வை ஊட்டி
வாழ்ந்து கொண்டிப்பவர்கள்

பொதுவுடைமை நெறி போற்றி
பொதுவுடைமையில் வாழ்கிறோம்

அடைந்தால் திராவிட நாடு
இல்லையேல் சுடு காடு
எங்கள் கொள்கையாக இருந்தது

ஈழ மக்கள்
எங்கள் தொப்புள் கொடி உறவு

தனி ஈழமே
எங்கள் கொள்கை

ஈழத்தில் எத்தனை உயிர் போனாலும்
கண்ணீர் வடிக்கிறோம், கதறுகிறோம்
கவிதைகளும் எழுதுகிறோம்

மேடைதோறும்
வாய் கிழிய, வயிறெரிய,
நெஞ்சு வலிக்கப் பேசுகிறோம்

அனைத்துலகுக்குத் தெரியாமல்
அணைத்து வைக்கிறோம்

வெளி உலகுக்குத் தெரியாமல்
வீரியப்படுகிறோம்

வேற்று மொழிக்காரர்களிடம்
வெளிப்படுத்தக் கூசுகிறோம்

எங்கள் இருப்பைக் காட்டி
இருப்பு வைத்துக் கொள்கிறோம்

இன்னுயிர் நீத்த இனமான உறவுகளை
ஓடோடிப்போய் பார்த்துக் கதறுகிறோம்

பேருந்து உடைப்பதில் இருந்து
பாடை வரை செய்கிறோம்

ஈழத்தில் பட்டினிச் சாவு
நாங்கள் பசியாறிக் கொள்கிறோம்

கூட்டணி தர்மம் செய்கிறோம்

தேர்தல் வந்துவிட்டது
எங்கள் கொள்கைகளை கொஞ்சம்
மூட்டை கட்டி வைக்கிறோம்
பா(வாஆ)டைக்குள்
நாங்கள் நுழைந்து விடவில்லை

நுழைந்தது எங்கள்
திராவிடமும், இனமான உணர்வும் மட்டுமே...!