திங்கள், 11 மே, 2009

நீ வருவாய் என

நான்கு வருடங்களின் பின்னர்
காணக்கிடைத்த சந்தோசம்
நெஞ்சை வருடுகிறது.
உன் பெயர்
அது நான் சூட்டி அழகு பார்த்தது.
உடம்பு புரட்டி
நீ தவள எத்தனித்த பொழுதொன்றில்
கருமேகம் கருக்கட்ட
திறந்திருந்தவை எல்லாம் பூட்டிக்கொண்டன.

'அண்ணா' எனச் சொல்லித்தந்து
சொல்லச்சொன்ன போது
கருவிழி உருட்டி கதை பல பேசியவன் - பின்னர்
'அண்ணா' சொன்னபோது
அருகிருந்து கேட்க
போர் என்னை விடவில்லை.

'அம்மா' சொன்னது
தத்தி தத்தி நடை பழகியது
முதன் முதல் உண்ட அன்னம்
பல்லுக் கொழுக்கட்டை
எல்லாமே
கடித வரிகளில் தான்
காணக்கிடைத்தது எனக்கு.

பின்னொரு நாளில் - எங்கள்
ஊருக்குள்ளும் புகுந்தார்கள் என்ற போது
நீ வருவாயெனக் காத்திருந்தேன்
வந்தார்கள் சிலர் - ஆனால்
நீ வரவில்லை.

சுட்டெரிக்கும் வெயிலில்
குறுகிக் கொண்டிருந்த பாதையில்
நாளை நிமிர்வாயென
பிஞ்சுப் பாதம் வலிக்க வலிக்க
ஓடிக் கொண்டிருந்தாயாம்.

அள்ளி அணைத்து முத்தமிட்டு - உன்னைத்
தோளில் ஏற்றி
காவடி சுமக்க ஆசை இருந்தும்
உனக்கும் எனக்குமிடையே
இரும்புத் திரையிட்டு விட்டு
கொக்கரிக்கின்றனர் சிலர்
ஆனால்,
எப்படியென்று தெரியவில்லை
இன்று நீ வந்தாய்.

மங்காத உன் அழகு வதனம்
குண்டான உன் உடம்பு
இரு பிஞ்சுக்கரங்களையும் விரித்து
'அண்ணா' எனக் கூவியபடி
குடு குடு காலால் ஓடி வந்தாய்.
உன்னை வாரி அணைத்து
உச்சி முகர்ந்த பொழுதில் தான்
அழுகின்றேன் - அது
ஓர் கனவென உணர்ந்து
ஆனாலும்,
நாளை பொழுது விடியும்
நீ வருவாய்.!