புதன், 29 ஏப்ரல், 2009

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத்தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிம் சிறுவர்க்குக்
கை கொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுதுதொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல…
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மை மீதுதான்!

குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கு அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!

சனி, 11 ஏப்ரல், 2009

வீழ்ச்சி நிலையில்லை..உணர்வுகொள் தமிழா!

தமிழா!
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி
புதைத்தாலும் கலங்காதே
தமிழா!
தோண்டி புதைத்த அடிக்கல்தான்
ஆயிரம் மாடிக்கு படிக்கல்..

உதிர்ந்துதான் போனாய் என்று
ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான்
பாய்ந்தோடும் ஆறாய் சேரும்
வானத்து நீர் வீழ்ந்துதான்
பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே
பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்

தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து
சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும்
பறக்க விட்டு விடு உன் புத்தியை
புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்


தமிழா இரவும் பகலும் உண்டேல்
அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால்
சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும்
அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்

இரை தேடி தோற்ற புலி
பசியாலே படுத்து செத்தது உண்டா.......?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும்

தோல்விகள் வருவதால் தாண்ட
வெற்றியை தேடுகின்றனர் பல பேர்
தோல்விகள் இல்லையென்றால்
வெற்றியில் இனிமை ஏது.....?
தோல்வியில் துன்பம் கொண்டால்
வெற்றியை சிந்திக்க நேரம் ஏது.....?

கல்வியில் தோல்விகள் வந்தால்
கற்றலில் முறையை மாற்று
பயணத்தில் தோல்விகள் வந்தால்
அந்த பயணத்தின் முறையை மாற்று
ஆராட்சி தோல்வியில் இருந்தே
இன்றைய விஞ்ஞானம் உருவாகி போச்சு
போரினில் தோல்விகள் கண்டே பல
ஆயுதம் உருவாகி போச்சு

வெற்றிக்காய் நீ உழைத்தால் -அது உன்னை
அரியாசனத்தில் இட்டு மகுடங்கள் சூட்டிடும்
நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்

ஓடும் நீருக்கு தடை இட்டால்
அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால்
பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்
தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு

வீழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு ........