வியாழன், 5 மார்ச், 2009

முகமிழந்த வாழ்க்கை

காலம்
தூக்கி எறிந்தது
தொலை தூரத்திற்கு
வந்தவன் வந்தவன்தான்
போக வழி தெரியவில்லை

தொலைவு, மரணம்,துயரம்
இவற்றோடு நெருங்கி விட்டேன்..

சிக்குண்ட மயிர்
உயிரற்ற விழிகள்
வாடிய முகமாய்
அலைதலும் தொலைதலுமாய்
கூவிக்கொண்டே ஓடுகிறது வாழ்க்கை...

மொழி தெரிந்த
ஒரு பட்டிணத்துக்குள்
முகமூடி வாழ்க்கை...

வாழ்விழந்த நாள்
விலகும் என
சகித்து கொண்டே
வாழ்கிறது வாழ்க்கை....
கசியும் நீரை
காரணம் சொல்லி நிறுத்த முடியவில்லை...

இழப்புக்களின் துயரம் தாங்காமல்
இதயம் வெடிக்கிறது,
இழப்பிலும் பூத்து
இறுதி ஊர்வலத்தில் வளர்கிறேன்..
இன்னொரு தேசத்தில்...

"மறைவில்
நொருங்குவதற்கு பதிலாய்
கடலில் கரைந்திருக்கலாம்
அலையாக எழுந்துவர......"

காலங்களும் கனவுகளும்

இடமும் இருப்பும்
நிலையனதாக இல்லை
வாழ்க்கை
அர்த்தமற்றதாகிவிட்டது.....

சொந்தம் பந்தம்,ஊர்,உறவு
நாடு,நகரம்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
முகமிழந்து முகவரியிழந்து
சொந்த பெயரற்று
பெயர் சொல்ல முடியாத
நாடுகளில் தற்கலிகமாய்....

காலங்களும் கனவுகளும்
புதைந்துபோய்
காயங்களும் கண்ணீரும் மட்டுமே
மிச்சப்பட்டிருக்கிறது.......

இழப்புக்களும் ரணங்களும்
என்பின் தொடர்ந்த வண்ணம்
இருக்கின்றன.........

வாழ்வின் நீள்பாதையில்
நிழல் எது-நிஐம் எது
நிரந்தரம் எது-என்று
உணர்த்தி போனதாய்
மண்ணும் மணமும்
சாலைகளில்.........

விரக்தியை மென்று
பொறுமையில் உழன்று
வரலற்றில் நேர்ந்த
வஞ்சனையை எண்ணி
நொந்து நூலகிறது
என் வாழ்க்கை.......!

தமிழன் என்ற இனம்

என் இனத்தை
அலட்சியமாய்
என் நிறத்தை
அருவருப்பாய்
பார்க்கும் இந்நாட்டு
மக்கள்

பொன்னகை
மேனியில்
மின்னியபோதும்
கையில்
சுமையோடும்
நெஞ்சில்
வலியோடும்
புன்னகை தேடியலையும்
என் இனத்தமிழர்கள்

ஓய்வின்றி உறக்கமின்றி
இயந்திரமாய்
உழைத்த ஊதியத்தை
உறிஞ்சி எடுக்கும்
வரிகளின் வலிகள்

தமிழன் என்ற
இனம் உலகில்
இருப்பதை
எப்போதாவது
தீவிரவாதிகளாய்
ஞாபகப்படுத்திக்
கொள்ளும் ஊடகங்கள்

தமிழின உணர்வுகளை
வெளிப்படுத்திக்
கொண்டால்
சிறைப்பிடித்து
சித்திரவதை செய்யும்
சட்டதிட்டங்கள்

இப்படியாக என்
சந்தோஷவேர்கள்
அறுந்தபடி
வாழ்ந்திடும் நான்
இந்நாட்டில் அகதி!

குரல் கொடு தோழா

குளிரிலும் பனியிலும்
உறைந்துவிடும் நீர்போல்
உள்ளதின் உணர்வுகளும்
உறைந்து கிடக்கின்றது

உருக வைக்க இங்கு
உன் குரல் கொடு
தோழா..!

உருவிலும் உயிரிலும்
உறவுகள் அங்கு
மெலிந்து கிடக்கின்றது

உயிர்வாழ கொஞ்சம்
உணவு கொடு
தமிழா..!